TEA Election 2013 & Its Results – An Opinion by an Ordinary Common Man!

நடந்து முடிந்த டீ தேர்தல், பல்வேறு குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

திருப்பூரில் பெருவாரியான தொழில்துறையினர் இந்த தேர்தல் ஏற்றுமதியாளர்களுக்கானது என்று நினைக்கவில்லை. தங்களது தொழிலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை ஏற்படுத்தவல்ல தேர்தல் என்றே கருதினர்.

அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகள் பொய்யாகிய நிலையிலும், நேற்றைய முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன், இந்த தேர்தல் நமக்கு அதாவது தொழில்துறையினருக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அவற்றை நாம் எவ்விதம் ஏற்றுக்கொள்ளப்போகிறோம்?

திரு. ராஜா எம் சண்முகம் பெரிதும் மதிக்கப்படுபவர், அவரை பற்றி அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்களுக்கு தெரியும், இடை விடாத முயற்சியும், திடீர் தோல்விகளும் அவருக்கு புதிதல்ல! தத்துவார்த்தமாக பார்த்தால் அவரது சிவில் சேவை தேர்வு தோல்வியே அவரை இங்கே ஒரு தனித்துவமான தலைவராக நமக்கு அளித்தது!

வீழ்ச்சியில் இருந்து எழும் சரித்திரம் படைத்தவர்களைப்போல அவரும் இந்த தோல்வியை வெற்றிப்படிகளாக மாற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.

கடந்த சில வாரங்களாக நடந்த பிரச்சார பணிகள் மற்றும் அறிக்கைகள் வைத்துக்கொண்டு பார்த்தால் திரு. ராஜா சண்முகம் அவர்களின் குழுவினரது ஒப்பிடத்தக்க இயலாத மாபெரும் முயற்சிகள், கூட்டு செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் திட்டமிட்ட நேர்த்தியான செயல்கள் அனைத்தும் என்றும் வீணாகப்போய்விடாது.

இணையம், பத்திரிகை மற்றும் நேரடி பிரச்சாரங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி “இணைந்து புது சரித்திரம் படைப்போம்” என்ற ஒட்டுமொத்த குறிக்கோளாக இருந்தது பிரமிக்க வைக்கக்கூடியது. என்னைப்போன்ற சாமான்யன் அதுவும் சங்கத்துடன் எந்தவித நேரடியான சம்பந்தமும் இல்லாத நிலையில் என்னால் திருப்பூருக்கு செய்ய இயலும் செயலாக பங்குபெறசெய்தது என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

பிரச்சாரங்கள் வலுப்பெறும் நிலையிலும், மிரட்டல்கள் மற்றும் தனிமனித வெறுப்பு எதிர் குழுவின் தலைவர் வெளிப்படுத்திய போது தன்னை சேர்ந்த இளைஞர்கள் எந்த விதத்திலும் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்று ஒவ்வொரு தினமும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே நேரம் கிடைத்த போதெல்லாம் பேசி அவர்களை ஊக்குவித்த தன்னிகரில்லா தலைவர்.

அவருடன் இணைந்து போட்டியிட்ட அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டவர்கள், கடந்த இரண்டாண்டுகளாக “ரெசிலியன்ட் திருப்பூர்” நிகழ்ச்சிக்ககவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் வாய்த்த பொழுதுகளில் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், குழு மனப்பான்மையும், சலிப்படையாத தொடர் புதிய முயற்சிகளும் எனக்கு பிரமிப்பு அளித்தன.

எந்தெந்த வழிமுறைகளில் வாக்காளர்களை அணுக இயலும் என்பதை தன்னுடன் இருந்த புதிய தலைமுறை தலைவர்களை ஆராய வைத்து, தகுந்த நபர்களை அணுகி, அத்துணை வழிமுறைகள் அனைத்தையும் அணுகும்படி செய்ததும், அவரது குழுவினரது புதியதை தேடி அவற்றை பொது நலத்திற்கு பயன்படுத்தும் சீர்கொண்ட செயல்பாட்டிற்கு ஒரு உதாரணம்.

தன்னுடன் எதிர் அணியினரை எதிர்த்து போட்டியிட்ட அனுபவம் வாய்ந்த வயதில் முதிர்ந்த நண்பர்களிடம் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு ஒவ்வொரு குறிப்பிட்ட முடிவுகளின் போதும் எல்லோரது ஆலோசனைகளை கேட்டு செயல்படுவதில் ஆகட்டும், அவரிடம் இருந்து நம்மை போன்ற இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை பல!

நேற்றைய தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும், சிலருக்கு “அக மகிழ்வை”யும் தந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முன்கணிப்புகள் திரு. ராஜ எம் சண்முகம் மற்றும் அவரது குழுவினர் குறைந்த பட்சம் எழுபது முதல் எண்பத்தைந்து வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடும் என்பதாக அறிவித்தன, இதனிடையே தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட விதிமுறை மீறி சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர்களது நீக்கம் திரு. ராஜ சண்முகம் அவரது குழுவினருக்கும் அவரை ஆதரிப்பவர்களுக்கும் தெம்பூட்டுவதாக இருந்தது. நேற்று ஒட்டு எண்ணிய அரங்கில் குழுமி இருந்த பெரும்பான்மை கூட்டம் ராஜா சண்முகம் அவர்களை ஆதரித்த ஏற்றுமதியாளர்கள், பின்னிரவு இரண்டு மணிவரை ஆர்வத்துடன் காத்திருந்து பின் ஏமாற்றமான முடிவினால் எந்த வித ஆரவாரம் இன்றி கலைந்து சென்றனர்.

இந்த தேர்தல் நிகழ்வுகள் அனைத்தையும் திரு. ராஜா சண்முகம் அவர்கள் ஆரம்பம் முதலே “மக்கள் எழுச்சி” இயக்கமாக உருக்கொடுத்தது ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துரையினரையும் ஒருசேர திரட்டி “போட்டியிடுவதன் காரணம்” அவர்களை சென்றடைய செய்தது ஆகியவை குறிப்பிடத்தகுந்ததாகும்.

எதிரணியினருக்கு இது எதிர்பாராத வெற்றியாக இருந்திருக்க வேண்டும். எந்த வித வெற்றிக்களியாட்டத்தினையும் நாங்கள் காணமுடியவில்லை. திரு. ராஜா சண்முகம் அவர்களது குழுவினர் தேர்தல் முடிவினையும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டத்தினை புறக்கணித்த நிலையில் எந்தவித புற எதிர்ப்பினையும் காட்டாமல் அமைதியாக வெளியேறியது அவர்களது தேர்ந்த, நிதானமான ஆளுமைப்பண்பினை உணர்த்தியது.

இத்துனை நாள் “மாற்றம்” குழுவினருடன் அவர்களது இணையம் மூலமாக வாக்கு சேகரிக்கும் முயற்சியில் எட்டுப்பட்ட எனக்கு முற்றிலும் புதியதொரு அனுபவம். புதிய தலைமுறை சிந்தனைகளுடனான முன்னேற்றம் மற்றும் பொது நலத்தினை முன்னிறுத்தி செயல்களுள் ஈடுபடும் ஒரு குழு! தனிமனித ஆதாயத்தினை பின்னிறுத்தி பொதுநல ஆதாயத்தினை முன்னிறுத்தி வேலை செய்யும் ஒரு குழு.

இந்த தேர்தல் எதிரணியின் தலைவரது பல செயல்களை வெளிச்சம் போட்டு அவரது முகத்திரையினை கிழித்ததாக பல ஏற்றுமதியாளர்கள் கூறகேட்டேன், இணையத்தின் முழுப்பயன்பாடு இந்த தேர்தலில் பயன்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இதில் மிகவும் வெளிப்படையாக கருத்துக்கள் பகிரப்பட்டன, பகிர்ந்த கருத்துக்கள் மற்றும் செய்திகள் எதிர்தரப்பினை பதிவிட்டவரை “மிரட்டும்” அளவுக்கு கொண்டு சென்றதை பார்த்தால் பெரும்பான்மையான பதிவுகள் நம்பகத்தன்மை அதிகம் வாய்ந்ததாகவே படுகிறது.

நமது நகரின் பிராதன தொழிலின் தலைமைக்கு “தனித்தன்மை கொண்ட குழுவினையும் அவர்களது தலைமையும்” தேர்ந்தெடுக்கப்படாமல் போனது வளர்ந்து வரக்கூடிய தொழில் துறையினர் அனைவருக்கும் துரதிருஷ்டமானது.

எந்த பக்கம் சார்ந்து இருப்பது, எவ்வித நிலைப்பாட்டினை எடுப்பது என்ற குழப்பங்கள் இன்று நேற்றல்ல, மகாபாரதம் தொட்டே இருந்து வருகிறது. போரில் அர்ஜுனன் தனது சொந்தமான பீஷ்மாச்சாரியாரை எதிர்த்த போதும், துரியோதனாதிகளை எதிர்த்த போதும்! அதன் படி நடக்கும் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலேயும் பெரிதும் ஆராயப்படுவது சரியான தருணத்தில் “எடுக்காமல் போன சரியான முடிவுகள் தான்” இன்று திருப்பூரும் அதே நிலையை அனுபவித்திருப்பதில் மிகுந்த துயருருகிரேன்.

இன்றைய செய்தியில் வெற்றி பெற்ற திரு. சக்திவேல் அவர்கள் தோல்வி அடைந்த குழுவினரை, கருத்து வேறுபாடு இன்றி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். எவ்வளவு தூரம் இது சாத்தியம் என்பது தெரியவில்லை.

எது எப்படியோ மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்களும் அவர்களுக்கு பக்க பலமாக செயல்பட்ட நாங்களும் பல்வேறு தர்ம சங்கடங்களையும், இடைஞ்சல்களையும் எதிர்தரப்பு மூலம் சந்திக்க நேரலாம் இனி வரும் காலங்களில், அனைத்தையும் சந்திக்கும் துணிவுடனேயே நாங்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டுள்ளோம். அவ்விதம் இடர்கள் வரும்பட்ச்ச்சத்தில் தைரியமாக இணையத்தில் உடனுக்குடனே பதிவிடுவோம் என்பதையும் இங்கே கூறிக்கொள்ளுகிறேன்.

என்னைப்பொறுத்தவரை இத்துனை நிகழ்ச்சிக்குப்பின்னால் இறைவனது “தாயக்கட்டை உருட்டல்கள்” இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குண்டு. ஒரு தன்னிகரில்லாத தலைவராக வருங்கால சந்ததிகளுக்கு திரு. ராஜா சண்முகம் அவர்கள் கல்லூரியின் தலைவராக இருந்து செய்ய வேண்டிய பணிகள் இன்னும் பல உள்ளனவோ என்னவோ?

இந்த தேர்தல் மூலம் சங்கத்தின் தலைமை மற்றும் செயற்குழு உறுப்பினர்களது இரு அணியினரது எண்ணிக்கை பலம் 63:37 ஆக உள்ளது ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி, செயல்பாடுகளில் ஒரு “மாற்றம்” ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நம்பலாம்.

இனிமேலாவது ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைமை நிதி உதவிகளை வீணாக எங்கெங்கோ மடை திறந்து விடுவதை தவிர்த்து சரியான திசையில் செயல்படுத்தும் பட்சத்தில் இரு தலைவர்களும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. திரு. ராஜா சண்முகம் அவர்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர் அல்ல, பதவியின் மேல் ஆசை உள்ளவரும் அல்ல ஆகையால் இனியாவது எதிர்தரப்பு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

இதனிடையே இந்த தேர்தல் செல்லாது என்று திரு. ராஜா சண்முகம் அவர்களது குழுவினர் நீதிமன்றத்தினை நாடும் பட்சத்தில் …. நாமும் பொறுத்திருப்போம் நல்லதொரு தருணத்திற்காக!!

இந்த பதிவினை எனது வலைப்பூவில் எழுதுவதாக இருந்தேன், பின்னர் அதிகாரப்பூர்வமாக எனது நிறுவனத்தின் பக்கத்திலேயே பதிவிட் முடிவு செய்து இங்கே பதிவிட்டுள்ளேன்.

தர்மத்தின் பக்கம் நின்று செயலாற்றும் போது இடர்ப்பாடுகள் வரலாம், அதனை எதிர்த்து நின்று தர்மத்தினை நிலைநாட்டவே இந்த மகோன்னதமான மானிடப்பிறவி எடுத்துள்ளோம் நாம் அனைவரும், இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால், அறிந்தால் இந்த மானுடம் செழிக்கும், மகோன்னதம் எட்டும்.

#என்னதான்_நடக்கும்_பார்க்கலாம்

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: