NIFTTEA College – Inputs from a Common Man

வழக்கம் போலவே இந்த முறையும் தமிழிலேயே எழுதுகிறேன்! தமிழறியா நண்பர்கள் மன்னிப்பார்களாக!
ஒவ்வொரு கல்விக்கூடமும் எதிர்காலத்திற்கான தேர்ந்த சந்ததியினரை உருவாக்கும் உன்னதமான பணியினை மேற்கொண்டுள்ளன. நேற்று பேஸ்புக்கில் ஒரு விவாதம் நிப்ட்டீ கல்லூரிக்கான தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பற்றியது. சூடான விவாதத்தில் பலர் இந்த “குழு” வெற்றிபெறுமா? அந்த குழு என்ன செய்யும் என்றெல்லாம் கலந்துபேசிக்கொண்டிருந்தனர். சில சுவாரஸ்யமான கருத்திக் கொள்ளக்கூடிய கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன.
இந்த கட்டுரையில் நான் எழுதப்போவது யார் வெற்றி பெறுவார் என்றோ? அல்லது யார் தோல்வியுறுவார் என்றோ அல்ல! நான் கூறப்போவது நல்லதொரு எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய கல்வி நிறுவனத்தினை எவ்வகையிலாலான செயல்முறைகள் மூலம் அடைய முடியும் என்பது பற்றியே.

இன்றைய நிப்ட்டீ கல்லூரியின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு வித்திட்ட திரு. ராஜ எம் சண்முகம் மற்றும் அவரது செயல் குழுவினர் பல்வேறு நல்லதொரு செயல்களை கல்லூரி மூலம் செயல்படுத்தியுள்ளார்கள். இந்த ஆண்டு தேர்தலில் திரு. ராஜா சண்முகம் அவர்கள் பங்கேற்காமல் அடுத்த தலைவர்களுக்கு இடம் கொடுத்து முன்னேற்றத்திற்கு ஒரு படியாய் இருப்பது பாராட்டுதலுக்குரியது.
தற்போது தேர்தலில் நின்று ஜெயிக்கும் அனைவருக்கும் மிகவும் சவாலான பணிகள் கண்முன்னே இருப்பதென்பது மறுக்க இயலாத ஒன்று.
இந்த கல்லூரி எப்பிடி இருக்க வேண்டும் என்பது பற்றிய எனது கண்ணோட்டத்தினை இங்கே வைக்கிறேன்.

ஒரு கல்லூரிக்கு நான்கு தூண்கள் இன்றியமையாதது. அவை; கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் நாலாவதாக முன்னேற்றத்தை மையமாக நிறுத்தி செய்யப்படும் செயல்பாடுகள்.

 

1. முதலில் மாணவர்கள் – கல்லூரியின் சேர்க்கையினை மேம்படுத்த உரிய நடவடிக்கை செய்ய வேண்டும்.

a. கல்லூரியின் “அவுட் ரீச்” சென்டர்களை (Out Reach Centres) தேர்ந்தெடுத்த மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் ஆரம்பிக்க வேண்டும். அவற்றின் மூலம் அந்தந்த பகுதிகளில் தகுந்த பிரச்சாரம் மூலம் நாம் எதிர்நோக்கும் மாணவர் சேர்க்கையினை எட்ட முடியும். இந்த அவுட் ரீச் சென்டர்களை கல்லூரியின் பிற தொழில் சார்ந்த பணிகளுக்கும் பயன்படுத்தலாம். உதாரணம்: ஆளெடுக்கும் பணி, பயிற்சி வகுப்புகள்.
b. ஏற்கனவே நடப்பில் உள்ள நமது நிறுவனத்தின் பணியாளர்களின் குழந்தைகளை தகுந்த உதவித்தொகை கொண்டு சேர்த்தல்.
c. முன்னாள் மாணவர்களின் அமைப்புகளை (Alumni Association) பலப்படுத்தி அவற்றினை ஒரு செயல் செய்யக்கூடிய முறையான அமைப்பாக மாற்றுதல்.
d. மாணவர்களை பொது மற்றும் தேச சேவைக்கு உட்படுத்துதல், நிர்வாக பயிற்சியினை இன்னும் தீவிரமாக மேற்கொள்ளுதல்.
e. மாணவர்கள் நமது ஆசிரியர்களின் மேன்மையை உணர்ந்து அவர்களை மானசீக குருவாக கொண்டு தங்களது வாழ்வினை மேம்படுத்த தக்கதொரு செயல்முறைகளை அவர்கள் மூலம் அறிதல் வேண்டும்.

2. அடுத்தது கல்லூரியின் ஆசிரியர்கள் – சீன தேசத்து தத்துவஞானி கன்பூஷியஸ் ஒரு முறை கூறினார் “இந்த உலகம் உங்களை ஓரிரு வருடங்கள் வரை நினைவில் வைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் விதையினை வித்திடுங்கள், ஒரு பத்து வருடம் நினைவில் இருக்குஅ வேண்டுமா? ஒரு மரத்தினை நடுங்கள்; நூறாண்டுகளுக்கு உங்கள் நினைவு மக்களிடம் நீடித்திருக்க வேண்டுமா? கல்வியினை போதியுங்கள்” என்றார்! எத்துனை உண்மையான வரிகள். ஆசிரியர்களாகிய நீங்கள் பொருள் ஆதாயத்தினை புறம் தள்ளி இந்த சமூகத்திற்காக ஆற்றிடும் இந்த பணியினை சமூகம் என்றுமே நினைவில் கொள்ளும். நீங்கள் இக்கல்லூரி மூலம் ஆற்றிட வேண்டிய பணிகள்;

a. உங்களது தகுதியினை மேம்படுத்துதல் – அதாவது குறைந்தது இரண்டு அல்லது நான்கு ஆராய்ச்சி மற்றும் தொழில் சார்ந்த கட்டுரைகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கல்லூரியும் தாங்களும் தொழில் சார்ந்த மீடியாக்களில் நன்கு அறியப்படுவீர்கள்.
b. ஒவ்வொரு ஆசிரியரும் பாடம் போதிப்பது மட்டுமின்றி குறைந்தது இரண்டு முதல் ஐந்து மாணவர்களை தங்களது மானசீகமான சிஷ்யர்களாக தத்தெடுத்து அவர்களது மேம்பாட்டிற்கு தேவையான செயல்முறைகளையும், செய்ய வேண்டியவற்றையும் அவர்களுக்கு போதித்து அவர்கள் மூலம் நாம் அனைவரும் விரும்பிடும் ஒரு மாற்றம் கொண்ட சமூகத்தினை படைத்திட உறுதி பூணுங்கள்.
c. கல்லூரி பணிகள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கு தாங்கள் எந்த விதமான சேவைகள் அளிக்க முடியும் என்பதை பட்டியலிடுங்கள் அவற்றினை தேர்ந்த ஒரு நிர்வாக ஆலோசகர்கள் கொண்டு நிறுவனங்களுக்கு தக்க வகையில் அளிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

3. அடுத்தது கல்லூரி நிர்வாகம் – எந்த கல்வி நிறுவனத்திற்கும் இல்லாத ஒரு பெருமை, நமது நிப்ட்டீ கல்லூரிக்கு உண்டு. தொழில் நிறுவனங்களால் தொழில் நிறுவனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம்.

எவ்வித கல்விக்கூட நிர்வாக அனுபவம் இன்றி இந்த அளவிற்கு கல்லூரியினை மேம்படுத்தியிருப்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும். நிறுவனம், நிறுவனத்தின் இலாபம் மட்டும் பாராமல் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு நீங்கள் இனிமேல் செய்ய வேண்டியது என்ன?

a. நம்மிடம் போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளன, இப்போதைக்கு கல்லூரிக்கு தேவை அறிவு சார் பொருட்கள், முதலீடுகள் தான். (Knowledge Capital)
b. துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு விரிவான கலந்துரையாடல்களை நிகழ்த்துதல், மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகள் (குறைந்த முதலீட்டில்) கொண்டு அவ்வகை செயல்பாட்டினை செயல்படுத்துதல்.
c. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அறிவு சார் சேவைகளை வகைப்படுத்தி கல்லூரி மூலம் அதை எவ்வகையில் வழங்க முடியும் என்பதை கண்டறிதல். குறைந்தது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று குறிப்பிடத்தகுந்த அறிவு சார் செயல்பாடுகளை நிறைவேற்றுதல்.
d. தேர்ந்த வல்லுனர்களை கொண்டு தகுந்த கமிட்டிக்களை அமைத்தல், அவ்வகை கமிட்டி மூலம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து மாடல் நிறுவனங்களை அமைத்தல்.

4. அடுத்தது முன்னேற்றத்தை மையமாக நிறுத்தி செய்ய வேண்டிய பணிகள்

a. கல்லூரி அதனது சீர்படுத்திய வருமான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றினை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்.
b. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்பது நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு அது பற்றி சம்பந்தப்படாத நான் கருத்து கூறுவது நல்லதல்ல.
c. கல்விப்பணிகள் மட்டுமில்லாது மற்ற வகையிலான வருமான அளவினை மேம்படுத்துவது, புதிய வருமானமீட்டக்கூடிய அமைப்புகளை உருவாக்குவது போன்றவற்றினை கருத்தில் கொள்ளலாம்.
d. புதிய வகை தொழில்நுட்பம், புதிய பொருட்களை தயாரிப்பது, குறித்த செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றினை தேர்ந்த குழுவினர் கொண்டு சந்தைப்படுத்துதல்.
e. கல்லூரிக்கான பிரத்யேக பத்திரிக்கையை ஆரம்பித்தல் – மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளியீடாக.
f. கல்லூரியில் “தொழில் முனைவோர் – கிளப்” ஏற்படுத்திடூவதன் மூலம் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் பணியினை மேம்படுத்தலாம்.
g. கல்லூரியின் மாணவர்களுக்காக “Meet Your Mentor” அதாவது “உனது வழிகாட்டியை சந்தி” நிகழ்வுகளை நடத்துதல். இது மூலம் துறையில் உள்ள சாதித்த தொழில்தலைவர்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தலாம். மேலை நாடுகளில் இந்த செயல்பாடு மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

மேற்சொன்ன கருத்துக்களில் சில ஏற்கனவே பல்வேறு நேரங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் நான் விவாதித்த ஒன்று தான், சில கருத்துக்கள் ஏற்கனவே கல்லூரியில் நடைமுறைக்கு வந்துள்ளன.

பல செய்யவேண்டிய பட்டியலில் உள்ளன. இன்னும் பல்வேறு கருத்துக்கள் மனதில் இருக்கின்றன. நேரமின்மை காரணமாக இத்துடன் நிறுத்தி, மீண்டும் வேறொரு பதிவில் உங்கள் அனைவருடனும் உரையாடும் வாய்ப்பை எதிர்நோக்கி விடைபெறுகின்றேன்.

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: