இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கம், நான் எனது கல்லூரி வாழ்வினை தொடங்கிய கட்டம். எனது படிப்பு சாராத பல்வேறு புத்தகங்களை படிக்கத்தொடங்கிய காலகட்டம். குறிப்பாக “கம்யுனிச” சிந்தாந்த புத்தகங்களை அதிகம் வாசித்த காலகட்டம். எனது குடும்பத்தினர்கள் அதிகம் கவலைப்பட்ட காலகட்டம்…
அந்த நேரத்தில் தான் அக்கினிச்சிறகுகள் என்ற புத்தகத்தினை படிக்க நேர்ந்தது. அதுநாள் வரையில் நான் எனக்கு கிடைத்த வாய்ப்பு சரியானதன்று, என்ற எதிர்மறையான கருத்து கொண்டிருந்தேன்.
திரு. அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை படித்தபின் அதுவரையில் என்னுள் இருந்த தேசம் மற்றும் சமூகத்தின் மீதான கோபம் புதியதொரு சிந்தனை உருவாக்கத்திற்கு மடை திறக்கப்பட்டது.
நான் அதிகம் படித்த புத்தகம் “அக்னிச்சிகுகள்” புத்தகம் என்றால் மிகையில்லை. என்னைப்போன்ற பல கிராமத்து சிறுவர்களுக்கு ஆதர்ச நாயகனாய் இருப்பவர் திரு. கலாம். கல்லூரி காலத்தில் நான் பல புதுவித ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டது “அக்னிசிறகுகள்” தந்த ஊக்கம்.
எனது சராசரி முயற்சிகளை தாண்டி நான் மேற்கொண்ட “குண்டு துளைக்காத ஆடைகள் வடிவமைப்பு” கலாம் அவர்களின் ஊக்கம் மிகுந்த சுயசரிதை படித்ததன் காரணம் என்பதை இங்கே பகிர்கிறேன்.
மேற்படிப்பிற்காக ஐஐடி டெல்லி சென்று அங்கே வாய்ப்பு கிடைக்காமல் போனபோது அக்னிசிறகுகள் தந்த ஊக்கம் தான் என்னை அடுத்த வாய்ப்பான என்ஐடி சென்று படிக்க செய்தது. என்ஐடி யில் நான் புரிந்த ஆய்வு மற்றும் அதற்கான காப்புரிமை பெறுவதற்கான செயல்திட்டம் அனைத்துமே கலாம் அவர்களது புத்தகம் மூலம் நான் பெற்ற ஊக்கம்.
இன்று நான் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அவரது கருத்து பாதிப்பு இருப்பதை நான் உணர்கிறேன்.
சாதாரண மனிதர் – அசாதாரண சிந்தனை மற்றும் செயல்திட்டம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதே அவரது வாழ்வின் பாடம் நமக்கு.