கழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை

நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு அதன் பணியாளர் மீதான அக்கறை அறிய வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் இரண்டு பகுதியை ஆய்வு செய்தாலே போதுமானது என்று நான் அடிக்கடி கூறுவேன். ஒன்று அந்நிறுவனத்தின் பணியாளர்கள் உண்ணும் உணவகம், மற்றொன்று அவர்கள் பயன்படுத்தும் கழிவறை.

கழிவறைக்கும் நிர்வாக மேலாண்மை திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கான எனது பதில் தான் இந்த கட்டுரை.

இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி உள்ள புள்ளிவிபரங்கள்.

Info

அந்த அறிக்கையில், தொற்றுநோய்கள் பெரும்பாலும் பணியிட சூழலில் குறிப்பாக சுகாதாரமற்ற கழிவறைகள் மூலமாகவும் பரவுகிறது, உலகளாவிய தொழிலாளர் அமைப்பானது (ILO) தனது 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் தோராயமாக 17% இறப்புகள் பணியிட சுற்றுப்புற சூழலினால் என்று கூறுகிறது. (ILO 2003)

மேலும் சுகாதாரமற்ற பணிச்சூழல் சில நாடுகளில் அந்த நாட்டின் உற்பத்திறனை வெகுவாக பாதித்து, அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை பாதிக்கும் என்று கூறுகிறது. (Hutton 2012).

உலகளாவிய ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை 80% க்கும் மேலான தொழிலாளர்கள் பெண்கள். திருப்பூரினை பொறுத்தவரை 54% க்கும் மேலான தொழிலாளர்கள் பெண்கள், இவர்களுக்கு அடிப்படை சுகாதாரமான பணியிட சூழலை தரவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

வியட்நாம் நாட்டில், ILO நடத்திய ஒரு ஆய்வில் சுத்தமான காற்று, தண்ணீர், சுகாதாரமான பணியிட சூழல், போதிய கழிவறைகள், உணவகங்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படை மருத்துவ சேவைகள் தருகின்ற நிறுவனத்தின் இலாபம் பிற நிறுவனங்களை விட 7.6% அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. (ILO 2015). 

தொழில் நிமித்தமாக பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நான் செல்ல வேண்டியிருக்கும், பெரும்பான்மையான நிறுவனங்களில் கழிவறை என்பது மோசமான நிலையிலேயே இருப்பதை நான் கண்டிருக்கிறேன். சில தொழில் நிறுவனங்களின் மேலாளர்கள், மனித வள மேலாளர்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களுடன் கலந்து பேசும் போது நான் அறிய நேர்ந்தவை என்னை இந்த கட்டுரையை எழுத வைத்தது. 

பொதுவாக நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கழிவறை சுத்தம் மற்றும் அதனை சிறந்த முறையில் பயன்படுத்துதல் குறித்த புரிதல் குறைவாகவே இருப்பதை அறிய முடிந்தது. இது அதிர்ச்சியளிக்கும் வண்ணம் இருந்தாலும் இது தான் நிதர்சனமான உண்மை. சிறுநீர் கழிக்க பயன்படுத்திய பின் தண்ணீர் ஊற்றுவதாக இருக்கட்டும், அதனை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்துதலாக இருக்கட்டும் பணியாளர்களின் ஈடுபாடு குறைவாகவே உள்ளது. பயன்பாட்டுக்கு எளிதான வண்ணம் கழிப்பிடங்களின் அமைப்பும் முக்கிய காரணிகளாக இருக்கின்றது.

உற்பத்தி துறையில்  என் சிற்றறிவுக்கு எட்டியவகையில் மிகவும் சிறப்பாக பணியாளர்களது கழிவறையின் சுத்தம் பேணும் பணியினை செவ்வனே செய்வது பஞ்சாலை நூல் நிறுவனங்கள். ஒரு முறை திருப்பூரின் பிரபலமான நபரின் பஞ்சாலையில் பணி நிமித்தமாக உரையாடும் போது அந்த நண்பர் பெருமையாக என்னிடம் கூறியதையும் இங்கே பதிவு செய்வதை என் கடமையாக கருதுகிறேன்.

அவரது பஞ்சாலையில் வேலைக்கு இருப்பதில் 90% பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து அவர்களிடம் பணிக்கு சேர்ந்தவர்கள். அவர்கள் வேலைக்கு சேரும்போது இருந்ததற்கும் இப்போதைக்கும் மிகப்பெரும் வித்தியாசம் காண முடியும். நான் இன்று அந்த பெண்கள் இந்த சமூகத்தில் பாதுகாப்பான அவர்களுக்கு ஏற்ற சூழலை அவர்களே தேர்ந்தெடுக்கும் வண்ணம் பயிற்சி பெற்றிருப்பதாகவே அறிகிறேன்.

அவர்களது பணியாளர்கள் வேலைக்கு சேரும் முதல் மாதம் முழுமைக்கும் அவர்களுக்கு பணி குறித்த பயிற்சி, பிறரிடம் பேசுதல், சுத்தம், சுகாதாரம் மற்றும் உடல்நிலை பேணுதல் வரை அனைத்தையும் கற்றுத்தருகிறார்கள். குறிப்பாக அந்த பெண்கள் மாதவிடாய் காலங்கள் போது சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்துவது குறித்தும் கற்றுத்தருகிறார்கள். நிதர்சனமான உண்மை எதுவென்றால் இந்த காலகட்டத்திலும் பலர் இந்த சானிட்டரி நாப்கின் பயன்பாடு குறித்து அதிகம் அறிந்திராத, கழிவறை பயன்பாடு குறித்து அறிந்திராத மிகவும் பின்தங்கிய பகுதியினை சேர்ந்தவர்களாக இருப்பதுதான்.

பணியில் சேரும் பெண்களுக்கு பணி நிமித்தம் மட்டும் பயிற்சியில் கற்றுத்தராமல், சுத்தம் சுகாதாரம் பற்றிய தெளிவான புரிதல் குறித்தும் பயிற்சி அளித்தல் என்பது பிற நிறுவனங்கள் பஞ்சாலை நிறுவனங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

சமீபத்தில் நண்பர் ஒருவரது கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் எங்களது குழுவினர் செய்த ஆய்வில், அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள்  கூறியதை இங்கே பதிவிடுகிறேன்.

 1. 82% பேர் பெண்கள் பணிபுரியும் அந்த தொழிற்சாலையில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இன்னமும் மேம்படுத்த வேண்டும் என்று அறிந்தோம்.
 2. நாங்கள் கலந்துரையாடிய பெண்களில் 24% பேர் கழிவறை பயன்பாட்டிற்கு பிறகு தொடர்ச்சியான சுத்தம்  செய்யும் பணி தேவை என்று கூறினர்.
 3. அவர்களில் 14% பேர் மாதவிடாய் காலங்களில் பணியிட கழிப்பறைகளை பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படுகிறது என்று வெளிப்படையாக கூறினார். மேலும் அவர்கள் மாதவிடாய் காலங்களில் அவர்களது சானிட்டரி நாப்கின்களை பணியிட சூழலில் டிஸ்போஸ் செய்யவேண்டி வந்தால் அதனை செய்ய முடியாமல் போகிறது என்றும் கூறினார்.
 4. இதனை நிர்வாகத்துடன் பகிர்ந்த போது, இத்துனை நாள் இது பற்றி தெரியாமல் போய்விட்டது என்றும் நிச்சயம் அவர்கள் கேட்ட அனைத்துமே செய்து தரப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

இதனை இங்கே பகிர்வதன் நோக்கம், பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கக்கூடிய நமது துறை, இன்னும் ஒரு படி சென்று அவர்களுக்கான மேலே சொன்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது நமது தார்மீக கடமையாகும். மேலும் ஒரு தொழில்நுட்ப அறிக்கை ஒன்று தோராயமாக ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 முறை பணியாளர்கள் வாஷ் ரூம்களை பயன்படுத்துவதாக கூறுகிறது. ஆக கீழ்க்காணும் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய தருணம் இது.

 1. நமது நிறுவனத்தில் போதுமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா?
 2. பெண்களுக்கான கழிப்பிடங்கள், போதுமான அளவில் உள்ளதா? அவைகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா?
 3. நமது பணியிட சூழல் சுகாதாரமான முறையில் இருக்கிறதா?
 4. உணவருந்தும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரனமான முறையில் இருக்கிறதா?
 5. சுத்தமான தண்ணீர், குடிநீர் நமது தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
 6. பணியாளர்கள் அவர்களை கரங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
 7. பெண்கள் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கான தேவைகள் குறிப்பாக நாப்கின் இன்சினரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளதா?
Everyone must be his own scavenger. – M. K. Gandhi

பாரத பிரதமரது “தூய்மை இந்தியா” இயக்கத்தில் நம் ஒவ்வொருவரது கருத்துக்களும் அந்த இலக்கினை சேர்ந்தே அடைவதும் நாம் நமது தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று. மகாத்மா அவர்களின் பிறந்த தினமான இன்று நமது தொழில்துறையில் நாம் செய்ய வேண்டிய தலையாய பணிகளில் ஒன்றாக “சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை” ஆகியவையாக மனதில் கொண்டு உறுதி பூணுவோம் “வைப்ரன்ட் திருப்பூர் 2020” நோக்கி.

References:

 1. http://www.un.org/en/events/toiletday/assets/img/posters/fact_sheet_toiletsandjobs_EN_3.pdf
 2. http://www.ilo.org
 3. http://www.mkgandhi.org/bahurupi/chap06.htm
 4. http://www.gandhi-manibhavan.org/gandhiphilosophybr /hilosophy_environment_sanitation.htm
 5. http://www.thehindu.com/opinion/blogs/blog-urban-prospects/article5192535.ece
 6. http://www.niticentral.com/2014/02/27/modi-launches-mahatma-gandhi-swachchata-abhiyan-194080.html
 7. http://www.swachhbharaturban.in/sbm/home/#/SBM

Raman Azhahia Manavalan

3 thoughts on “கழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை

 1. I agree with You Sir. As we are part of this cluster, we have much more responsibility to make them understand the very purpose of doing all these compliances in a better way. Let us start talk about these with the Mgmt and peers. Change will happen slowly. Let’s put our efforts in doing that. HR Managers are the change agents of Tirupur, that’s the reason the TEA have floated the HR Panel as their initiative first. Thanks for your time. Stay connected.

 2. Dear Sir,
  How many people will discuss with the management of the factory and reset their in house arrangements.
  99 .9 Percentage will not implement.
  If at least 60 Percentage follow the Tiruppur will be a Classic example.
  For the sake of Audits only the Management will be doing.
  No one else has really been good to give the best. Are you able to advertise it in Tiruppur then only there’s ACTUALLY Change will happen.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: