பசுமை போர்வை போர்த்தும் திருப்பூர்

நண்பர்களுக்கு வணக்கம்

கொரானா தொற்று காலம் நமக்கு பல புதிய படிப்பினைகளை வாய்ப்புகளை தந்துள்ளது. குறிப்பாக புதிய தகவல்கள் பற்றி ஆய்வு செய்திட தகவல்களை சேகரிக்க என்று.

அவ்வகையில் இந்திய அரசு வெளியிட்ட “வனங்களின் அறிக்கை” படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை அந்த அறிக்கை மூலம் கற்க நேர்ந்தது. ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் வாரியாக வனங்களின் விபரம் பற்றிய விரிவான ஆண்டறிக்கை. அதில் குறிப்பாக இரண்டு தகவல்களை இங்கே பகிர்கிறேன்.

தமிழகத்தின் வனப்பரப்பின் புள்ளிவிபரம், கடந்த ஆறு ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பதையே காண்பிக்கிறது, மேலும் பரவலாக மரங்கள் நடும் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தாலும் அவற்றின் பசுமை விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் நட்ட மரங்களை  குறிப்பிட்ட காலம் வரை கண்காணிப்பு சுற்றுக்குள் வைத்து  அவற்றினை பராமரிப்பதும் முக்கியம்.

கடந்த ஆறு ஆண்டுகளில் வனப்போர்வை தேசியஅளவில் 91,266 சதுர கிமீ யில் இருந்து 93,815 சதுர கிமீ ஆக உயர்ந்துள்ளது, இது தோராயமாக 2.85% அதிகம். தமிழகத்தின் வனப்போர்வை 4866 சதுர கிமீ யில் இருந்து 4671 சதுர கிமீ ஆக குறைந்துள்ளதை புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதே சமயத்தில் தமிழகத்தின் அங்கமான திருப்பூர் மாவட்டத்தின் வனப்போர்வை புள்ளிவிபரமானது புதிய உத்வேகத்தினை நமக்கு தருகிறது.

மாவட்டத்தின் வனப்போர்வையின் பரப்பானது முந்தைய கணக்கீட்டு ஆண்டின் அளவினை விட 15.5% அதிகமாகியிருப்பதாகவும், தோராயமாக 34 சதுர கிமீ வனப்பரப்பளவு அதிகமாயிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது. மாநிலத்திற்கே வனங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு நமது திருப்பூர் முன்னுதாரணமாக இருக்கிறது என்றால் மிகையல்ல.

கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் “வனத்துக்குள் திருப்பூர்” என்ற திட்டம் மூலம் மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து மரங்கள் மூலம் இந்த மாபெரும் புரட்சியை எற்படுத்திய வெற்றி அமைப்பும் அது சார்ந்த குழுக்களுக்கும் பாராட்டுகள்.

2015 இல் 1.35 லட்சம் மரக்கன்றுகள் என தொடங்கிய பயணம் இன்று 8 லட்சம் தொட்டு இந்த 2020 ஆம் ஆண்டின் இலக்கு எட்டவேண்டும் 10 லட்சம் மரங்கள் என்று பயணப்படும் வெற்றி அமைப்பினருக்கு இந்த பதிவின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Raman Azhahia Manavalan
Founder & CEO – VRNC
Reference:
1. Statistics are sourced from Forest Survey of India (MOEF&CC) – http://fsi.nic.in

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: